பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி
நாளை பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபிக்கு பிரதமர் மோடி செல்வார் என்று கூறப்படுகிறது. நாளை பிரான்சில் நடைபெற இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முக்கிய பிஸ்னஸ் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்தவர்களை பிரதமர் மோடி சந்திப்பார். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு, ஆகஸ்ட் 2015, பிப்ரவரி 2018, ஆகஸ்ட் 2019 மற்றும் ஜூன் 2022 ஆகிய வருடங்களில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்குச் சென்றிருக்கிறார்.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் உள்ள நெருங்கிய உறவு
கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ஏர்பஸ் A330 டேங்கர்களைப் பயன்படுத்தி, பிரான்சில் இருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த இந்திய ரஃபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பியது. இது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் உள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறது. செப்டம்பர் 2022இல், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் சுகாதாரத் துறைகளில் முத்தரப்பு ஒத்துழைப்பு முயற்சியை அறிவித்தன. இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் கடந்த ஆண்டு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில்(CEPA) கையெழுத்திட்டன. இது இருதரப்பு வர்த்தகத்தை, குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை உயர்த்தியது. இதனையடுத்து, இருதரப்பு வர்த்தகம் ஒரே வருடத்தில் 16% அதிகரித்தது.