
உக்ரைன் போர் மற்றும் மேற்காசிய பதற்றம் குறித்து பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்துரையாடல்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று தொலைபேசியில் உரையாடினர். அப்போது, உலக அமைதி மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், "என் நண்பர் அதிபர் மேக்ரானுடன் ஒரு சிறந்த உரையாடல் நடந்தது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்." என்று தெரிவித்தார். இந்த உரையாடல், தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறித்த இரு தலைவர்களின் கவலையை வெளிப்படுத்தியது.
போர்
உக்ரைன் போர் மற்றும் மேற்காசிய பதற்றம்
உக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக ஸ்திரத்தன்மையை பாதித்து வரும் நிலையில், அமைதியை மீட்டெடுக்க இராஜதந்திர தீர்வுகள் மற்றும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தியாவும் பிரான்சும் தங்கள் நீண்டகால மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி மாற்றம் மற்றும் உலகளாவிய ஆளுகை போன்ற துறைகளில் ஒத்துழைப்பு இந்த உறவின் முதுகெலும்பாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முனைப்பு காட்டும் நிலையில், இந்தியா-பிரான்ஸ் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.