செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு
செப்டம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குச் வர இருக்கிறார். செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பல முக்கிய உலக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த உச்சிமாநாட்டின் போது, ஜி 20க்கு தலைமை தாங்கியதற்காக பிரதமர் மோடியை பைடன் பாராட்டுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலக சவால்களை எதிர்கொள்வது குறித்து பேச இருக்கும் இரு நாட்டு தலைவர்கள்
"வியாழகிழமை(செப்டம்பர்-7), ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் இந்தியாவின் புது டெல்லிக்கு செல்கிறார். வெள்ளிக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்பார்" என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்ய போரினால் ஏற்பட்ட தாக்கங்கள், வறுமையை ஒழிப்பதற்கு உலக வங்கியின் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட உலக சவால்களை எதிர்கொள்வது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜி20 என்பது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில்,கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா,இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்-கொரியா, மெக்சிகோ,ரஷ்யா, சவுதி-அரேபியா, தென்னாப்பிரிக்கா,துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய-ஒன்றியம்(EU) மற்றும் அமெரிக்கா(USA) ஆகிய நாடுகள் ஜி20யில் அடங்கும்.