தாய்ப்பால் தானம், நடமாடும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்..வயநாட்டில் உயிர்த்தெழுந்த மனிதம்
கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 256 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேப்பாடி அருகே மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய கிராமங்கள் இந்த அனர்த்தத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவம் 1,000 பேரை மீட்டுள்ளது
தகவல்களின்படி, இந்திய இராணுவம் சுமார் 1,000 பேரை வெற்றிகரமாக மீட்டுள்ளது மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) முயற்சிகளை ஒருங்கிணைக்க கோழிக்கோட்டில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "குறைந்தது 1,500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமித்துள்ளோம்." ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் குழுக்களுடன் மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கின.
மீட்பு பணியில் களமிறங்கிய பொது மக்கள்
மீட்பு பணியில் பொதுமக்களும் ஈடுபடுத்தி கொண்டனர். ராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தற்காலிக இரும்பு பாலத்தை அமைத்து வருகின்றனர். ஏற்கனவே இருந்த நிரந்தர பாலம் உடைந்த காரணத்தால் மக்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. அதோடு, உள்ளூர் மக்கள் ஜீப்பில் மொபைல், லேப்டாப் ரீசார்ஜ் பாயிண்ட் ஆகியவற்றை உருவாக்கி உதவி வருகின்றனர். ஒரு பெண் இந்த நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த பிஞ்சு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்ததாகவும் PTI செய்தி வெளியிட்டுள்ளது.