LOADING...
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ரயில் சேவையைப் பெறும் மிசோரம்; செப்.13இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ரயில் சேவையைப் பெறும் மிசோரம்

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ரயில் சேவையைப் பெறும் மிசோரம்; செப்.13இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
06:52 pm

செய்தி முன்னோட்டம்

மிசோரம் மாநிலம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக ரயில் சேவையைப் பெற உள்ளது. முதலமைச்சர் லால்டுஹோமா, பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 அன்று பராபி-சாய்ராங் ரயில் பாதையைத் திறந்து வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தொடக்கத்தின் மூலம், மிசோரம் தலைநகரான ஐஸ்வால், இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடிக்கிறது. சாய்ராங் ரயில் நிலையம் ஐஸ்வாலுக்கு அருகில் அமைந்துள்ளது. மத்திய அரசின் கிழக்கு நோக்கிச் செயல்படு (Act East) கொள்கையின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த 51.38 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதை ஐஸ்வாலை அசாமில் உள்ள சில்சாருடன் இணைக்கும். இந்த திட்டம் பொறியியல் ரீதியாக ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

பொறியியல்

பொறியியல் உச்சம்

இந்த ரயில்வே பாதையில் 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள் மற்றும் 87 சிறிய பாலங்கள் உள்ளன. இதில் 104 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலம், குதுப்மினாரின் உயரத்தை விட அதிகமாகும். பிரதமரின் வருகை குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் தான் பேசியதாகவும், சாய்ராங் ரயில் நிலையத்தை உலகத் தரமான வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லால்டுஹோமா தெரிவித்தார். இந்த நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற சேவைகள் இயக்கப்படும் எனவும் அவர் கூறினார். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஐஆர்சிடிசியும் மிசோரம் அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதை, மிசோரம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.