சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக். இதற்காக ரூ.1,819 கோடி நிதியை முதலீடு செய்யவிருக்கிறது அந்நிறுவனம். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த சில மாதங்களாக தமிழக அரசுடன் நடத்தி வந்தது அந்நிறுவனம். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்தப் புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியிருக்கிறது. இந்த தொழிற்சாலையை சென்னையில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருவயலில் இருக்கும் மஹிந்திராவின் ஆரிஜின்ஸில் கட்ட திட்டமிட்டிருக்கிறது மிட்சுபிஷி. இதற்காக மஹிந்திரா தொழிற்சாலைப் பூங்காவுடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது மிட்சுபிஷி. 52 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய தொழிற்சாலை கட்டப்படவிருக்கிறது.
புதிய ஏசி தொழிற்சாலை:
ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் புதிய தொழிற்சாலைகளை கட்டமைப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது அந்நிறுவனம். அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்தியாவிலும் தங்களுடைய மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா துணை நிறுவனத்தின் மூலம் 222 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.1,800 கோடி) முதலீடு செய்யவிருக்கிறது. அக்டோபர் 2025 முதல் இந்தப் புதிய தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சாதனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு மட்டுமே, ஏற்றுமதி செய்யும் திட்டம் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது மிட்சுபிஷி. மேலும், இந்தப் புதிய தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் 2,000 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.