பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?
பானுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து பலரும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதில் மெத்தனம் காட்டியதையடுத்து, கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாக, கடந்த ஜூன் 30-ம் தேதி வரை ரூ.1,000 அபராதத்துடன் பானுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எப்போதும், குறிப்பிட்ட காலக்கெடு முடிவுக்கு வருவதற்கு முன்பு புதிய காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்கும். ஆனால், இந்த முறை அப்படி புதிய காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், கடந்த 30-ம் தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும் என முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பிலேயே மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பானுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
பானுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பான் அட்டையானது மத்திய அரசு அறிவித்தது போல் செயலிழந்து விடும். செயலிழந்த பான் கார்டு என்பது பான் கார்டு இல்லாததற்கு சமம். பான் அட்டை இல்லாமல் ஒருவரால் வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது. நம்முடைய பான் அட்டையைக் கொடுத்து நாம் சமர்ப்பித்து, நிலுவையில் இருக்கும் செயல்பாடுகள் எதுவும் முடிக்கப்படாது. மேலும், பான் அட்டை இல்லை என்றால், கூடுதலான வரியை நாம் செலுத்த வேண்டியிருக்கும். ஜூன் 30-க்குப் பிறகு தற்போதும் பானுடன் ஆதாரை இணைக்க முடியும். நாம் ஆதாரை இணைப்பதற்கான படிவத்தை சமர்ப்பித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நம்முடைய பான் அட்டை செயல்பாட்டிற்கு வந்து விடும். ஆனால், இப்போது பானுடன் ஆதாரை இணைப்பதற்கு ரூ.1000 அபராதத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.