மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் சிலை அமைக்க அந்த இடத்தினை கேட்டு தமிழக அரசு நிர்பந்திப்பதாக செய்திகள் பரவுகிறது. ஆனால் அந்நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9ஏக்கர் நிலம் தற்போது காலிமனைகளாகவும், வணிகம் செய்யும் பகுதிகளாகவும் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியின் நுழைவாயில் சேலம்-ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி என்னும் கிராமத்தின் சர்வே எண்.8ல் அமைந்துள்ளது. இப்பகுதியில் சாலையினை விரிவாக்கம் செய்யவுள்ளதால் தமிழக நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்ய அலுவலர்கள் கொண்டு கடந்த 2ம்.,தேதி அளவீடு செய்தது என்று கூறியுள்ளார்.
இடத்தை கேட்டு நிர்பந்திப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை - அமைச்சர்
மேலும் அவர், அவ்வாறு அளவீடு செய்ததில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முழுமையாக நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அரசின் நிலவரைபடத்தில் இருப்பதுப்போல் வரையறை செய்ய, நெடுஞ்சாலையின் எல்லைப்பகுதியில் உள்ள எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பில்லாமல் எல்லை கற்கள் நடப்பட்டது என்று கூறியுள்ளார். தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவுப்பகுதி முழுவதும் நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் அமைந்திருப்பதால், பழமையான இந்நுழைவாயிலை பாதுகாப்பதோடு, பராமரிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், அதனடிப்படையில் இப்பகுதியில் வேறு எவ்வித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவோ, சிலைகளை நிறுவவோ அரசிடம் திட்டம் ஏதுமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இதனிடையே, அரசு தரப்பில் நெடுஞ்சாலைத்துறை இடத்தினை தவிர்த்து வேறு இடத்தை கேட்டு நிர்பந்திப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதை தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.