சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார். சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகரில் உள்ள கடற்கரைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், அங்கு பல்வேறு கடைகளும் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு சேறும் குப்பைகளின் அளவு மிக அதிகமாக உள்ளது. கடற்கரைகளை சுத்தமாக பேணுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடைகளை கண்காணித்து விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அனைத்துவிதமான நிலத்திலும் இயங்கக்கூடிய மூன்று அதிநவீன ரோந்து வாகனங்களை சென்னை மாநகராட்சி தலா ரூ.16 லட்சம் வீதம் மொத்தம் ரூ.48 லட்சத்திற்கு வாங்கியது. இதை மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட இயந்திரம்
சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீட்டருக்கு கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர் என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.22.80 கோடி மதிப்பில் கூடுதலாக 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர்கள் வாங்கப்பட்டன. இவற்றையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல், சென்னை கடற்கரைகளை சுத்தம் செய்ய 2019 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த 7 இயந்திரங்கள் தேய்மானம் அடைந்துள்ள நிலையில், அவற்றில் இரண்டை முதற்கட்டமாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன அணிகளையும் வழங்கினார்.