
வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
நெய்வேலி-என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று(ஜூலை.,28)என்.எல்.சி. நிறுவனத்தினை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் கலவரமாக மாறியநிலையில், கலவரத்தில் ஈடுபட்ட பாமக'வினர் 28 பேர்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து கூறுகையில், என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கப்பாதை விரிவாக்கப்பணியினை மேற்கொள்ள பரவனாறு மாற்றுப்பாதை அமைப்பது மிகவும் அவசியம்.
அதனை செய்தால் தான் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளமுடியும்.
இதற்காக தான் 6 கிராமங்களில் அந்நிறுவனம் நிலத்தினை கையகப்படுத்துகிறது.
இதற்காக முன்னதாகவே 304ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 273-ஹெக்டர் ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.
தங்கம் தென்னரசு
தமிழகத்தில் இதுபோன்ற வன்முறைகளை தமிழக அரசு என்றும் அனுமதிக்காது - அமைச்சர்
இதனைத்தொடர்ந்து அவர், வெறும் 30-ஹெக்டர் ஏக்கர் நிலம் தான் இன்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.
2006-2013ம் ஆண்டுக்காலக்கட்டத்தில் கையகப்படுத்திய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.6லட்சம் இழப்பீடுத்தொகை வழங்கப்படுவதோடு, ரூ.10லட்சம் கருணைத்தொகையும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு இழப்பீடுகளை பெற்றுக்கொண்டும் சிலர் நிலத்தை ஒப்படைக்காமல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், என்.எல்.சி.நிறுவனத்தினை எதிர்த்து பாமக அறவழிப்போராட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்தனர். ஆனால் அது கலவரமாக மாறியது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் மத்தியில் நடக்கும் இப்பிரச்சனை சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் வன்முறையாக மாறுகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுபோன்ற வன்முறைகளை தமிழக அரசு என்றும் அனுமதிக்காது என்று கூறியுள்ளார்.
அதேபோல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.