அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை - காவேரி மருத்துவமனை
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில், தமிழ்நாடு மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியினை கடந்த ஜூன் 14ம் தேதி அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இருதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு இருந்த காரணத்தினால் மருத்துவர்கள் அவருக்கு கடந்த ஜூன் 21ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சையினை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், "செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்" என்று மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது.
தனியறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
இதனையடுத்து அவர் தற்போது, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும், அமைச்சர் குழாய் வழியாக உணவினை உட்கொண்டு வருகிறார் நிலையிலிருந்து உடல் தேறி, இன்று(ஜூன்.,26)அவரே உணவினை சாப்பிட்டார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தொடர்ந்து 20 நாட்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும், அவர் தனது இயல்பு நிலைக்கு திரும்பும்வரை மருத்துவ கண்காணிப்பு அவருக்கு தேவை என்றும் காவேரி மருத்துவமனை தகவலளித்துள்ளது. அமைச்சர் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் நீதிமன்றத்திலோ, புழல் சிறையிலோ அனுமதியினை பெற்று அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.