காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் இன்று அதிகாலை கைது செய்தது. நேற்று முழுவதும் இதற்கான விசாரணையும் சோதனையும் நடைபெற்று வந்த நிலையில், சுமார் 18 மணிநேரம் செந்தில் பாலாஜியிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று நடைபெறும்
அங்கு அவருக்கு கரோனரி ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் மூலம், அவரது இருதயத்திற்கு செல்லும் மூன்று முக்கியமான ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது கண்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டிருக்கும் இருதய அடைப்பை சரி செய்ய சீக்கிரம் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும், செந்தில் பாலாஜியை சோதித்த ESI மருத்துவர்களும், AIIMS மருத்துவர்களும் அவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்றினால் நல்லது என்று அறிவுரை வழங்கினர். இந்நிலையில், அவர் தற்போது காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.