ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று,(ஜனவரி 14) அறிவித்துள்ளார். மேலும் அவர், காங்கிரஸ் கட்சியுடனான தனது குடும்பத்தின் 55 ஆண்டு கால உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் இருந்து இன்று தொடங்க உள்ள நிலையில் மிலிந்த்-ன் இந்த ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் மிலிந்த் தியோரா இணையப்போகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இதை குறித்து செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, அதனை வதந்தி என நிராகரித்த மிலிந்த் தியோரா இன்று அதை நிஜமாக்கவுள்ளார்.
பாஜகவின் சதி என காங்கிரஸ் கருத்து
மிலிந்த் தியோரா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதும், அதை எப்போது செய்ய வேண்டும் என்பது கூட பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடி செய்த சதி என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "தியோரா எந்த தருணத்தில் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவை லோக் கல்யாண் மார்க்-கில் இருப்பவர்(அதாவது பிரதமர் மோடி) முடிவு செய்துள்ளார். எந்த தருணத்தில் தியோரா கட்சியில் இருந்து வெளியேறினால் அது தலைப்புச் செய்தியாகும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்" என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா ப்ளாக், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து நேற்று ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.