காலத்தால் அழியாத கட்டிடக்கலை: 91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை!
காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது. இந்த ஆணை இன்று தன்னுடைய 91 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இரண்டு முறை மின்னல் தாக்கப்பட்ட நிலையிலும் எவ்வித சேதமும் இன்றி கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்றியமையாததாகும். ரூபாய் 4 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்திற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிய காலத்தை வென்ற ஒரு கட்டுமான வரப்பிரசாதம்.
காவிரி ஆற்றங்கரை பாசனத்திற்காகவும், தண்ணீர் சேமிப்பிற்காகவும் கட்டப்பட்ட அணை
பாய்ந்து வரும் காவிரி நீரை சேமித்து வைக்கவும், டெல்டா விவசாயிகளின் பயிர்களை காக்கவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1925ஆம் ஆண்டு மேட்டூர் அணை காட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த அணையின் தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பினை இஞ்ஜினியர் கர்னல் டபிள்யூ. எல். எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்கஸ் ஆகியோர் மேற்கொள்ள, ஒன்பது ஆண்டு உழைப்பில் உருவானது இந்த அணை. அணையின் கட்டுமான பணிகள் 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி முடிவடைய, இதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி என்பவர் அணையை திறந்து வைத்தார்.
அணையின் கொள்ளளவு
மேட்டூர் அணையின் நீளம் 5300 அடி. அணையின் நீர் தேக்கப் பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடிவரை தண்ணீர் சேமித்து வைக்க முடியும். பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு , கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என்று மூன்று நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணையின் இடது கரை பகுதியில், உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும் 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த மதகுகள், அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும், இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.