புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. அதனுள் ஒன்று தான் இந்த இன்புளூயன்சா ஏ வைரஸின் துணை வகையாக கருதப்படும் எச்3என்2 வைரஸ். தற்போது அதிகளவு பரவும் இந்த வைரஸ் குழந்தைகள் மற்றும் முதியோர்களையே அதிகம் பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலை தடுக்க அனைத்து மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அண்மையில் உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார மையம் அறிக்கை வெளியீடு
அந்த அறிக்கையில், தொற்று நோய் பாதிப்புகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். காய்ச்சல், இருமல்-தும்மல், சுவாசக்கோளாறு, உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சைப்பெறவேண்டும். அதேபோல் நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை மக்களை தவிர்த்து கொள்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோரிமேடு மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதியுடன் கூடிய தனிவார்டுகள் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடசீனா பகுதிகளில் ஏராளமான குழந்தைகள் சுவாசக்கோளாறு உள்பட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே, உலக சுகாதார மையம் இதுதொடர்பான அறிக்கையினை அண்மையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.