உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 37 பேர் பலி
உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், உயிரிழந்த 15 பேரின் உடல்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலர் பலத்த காயமுற்றுள்ளனர் மற்றும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது. இது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Twitter Post
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பவுரி மற்றும் அல்மோரா மாவட்டங்களில் உதவி பிராந்திய போக்குவரத்து (ARTO) அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். "அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்தில் பயணிகளின் உயிரிழப்புகள் பற்றிய மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அவர் X இல் கூறினார். மேலும், சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த குமாவோன் மண்டல் ஆணையருக்கு தாமி உத்தரவிட்டுள்ளார்.