
ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்
செய்தி முன்னோட்டம்
ஹரியானாவில் ஆளும் பாஜக-ஜனநாயக்க ஜனதா கட்சி(ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனோகர் லால் கட்டார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஹரியானா அரசியலில் இந்த பெரும் மாற்றம் நிகழ்ந்துளளது.
எம்எல் கட்டார் தனது அமைச்சரவையையும் ராஜினாமா கடிதத்தையும் ஹரியானா ஆளுநரிடம் ஒப்படைத்தார் என்று ஹரியானா அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு உடன்பாட்டை எட்டத் தவறியதனால், பாஜக மற்றும் ஜேஜேபி இடையேயான உறவுகள் மோசமடைந்தன.
அந்த மாநிலத்தின் தற்போதைய துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தான் ஜேஜேபி கட்சிக்கு தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
அடுத்து ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை தொடங்கியது
தற்போது, 41 பாஜக எம்எல்ஏக்களும், அது போக சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று பாஜக கூறியுள்ளது.
ஹரியானா மாநில சட்டசபையில் 45 இடங்கள் இருந்தால் ஒரு கட்சி பெருமபான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
எனவே, மாநில பாஜக தலைவர் நைப் சிங் சைனி, எம்.எல் கட்டாருக்குப் பதிலாக முதல்வராக பதவியேற்பார் என்று பேசப்படுகிறது.
பாஜக மற்றும் ஜேஜேபி ஆகிய இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் அந்தந்த கட்சி எம்எல்ஏக்களை தனித்தனியாகக் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் உள்ளிட்ட மத்திய பாஜக தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட உள்ளனர்.