140-வது மன் கி பாத் அத்தியாயம்: சஞ்சார் சாதி, ஃபிட் இந்தியா குறித்து பிரதமர் மோடி உரை
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் 140-வது அத்தியாயத்தில் இன்று (நவம்பர் 29) காலை 11 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான சமூகத்தின் கூட்டுப் போராட்டத்தைப் பாராட்டிய பிரதமர் போதைப்பொருள் பிடியிலிருந்து மீண்டு வந்த இளைஞர் ஒருவருடன் கலந்துரையாடினார். மேலும் நஷா முக்த் யுவ அபியான் இயக்கம் நாடு முழுவதும் வேகமெடுத்து வருவதாகவும் மன உறுதியுடன் போதைப் பழக்கத்தை வென்ற இளைஞர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிஷன் கர்மயோகி சாதனை
₹5,000 கோடி சைபர் மோசடியைத் தடுத்த சஞ்சார் சாதி மற்றும் மிஷன் கர்மயோகி சாதனை
சைபர் மோசடிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதில் சஞ்சார் சாத்தி செயலி முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
23 மொழிகளில் கிடைக்கும் இந்தத் தளம் 1600-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் காவல்துறையுடன் இணைக்கப்பட்டு இதுவரை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்புகளைத் தடுத்துள்ளது.
இதேபோல் குடிமகனே கடவுள் என்ற கொள்கையுடன் செயல்படும் iGOT கர்மயோகி தளத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் மூலம் அரசு ஊழியர்கள் 1.75 கோடிக்கும் அதிகமான பயிற்சிகளை நிறைவு செய்து புதிய தொழில்நுட்பங்களைக் கற்று வருவதாகப் பிரதமர் பாராட்டினார்.
பீகார் அருங்காட்சியகத்திற்குப் பாராட்டு
உலகின் சிறந்த அருங்காட்சியகங்களில் 9-வது இடம் பிடித்த பீகார் அருங்காட்சியகத்திற்குப் பாராட்டு
கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் உலகின் சிறந்த 100 அருங்காட்சியகங்களின் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
பாரிஸின் லூவ்ரே மற்றும் நியூயார்க்கின் தி மெட் ஆகிய புகழ்பெற்ற அருங்காட்சியகங்களை முந்தி ஆசியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ள பீகார் அருங்காட்சியகம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
புதிய இடங்களுக்கு பயணம் செய்யும்போது அங்குள்ள அருங்காட்சியகங்களுக்கு சென்று நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
சாக்லேட் ஏற்றுமதி
சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுகோள் மற்றும் 25% உயர்ந்த சாக்லேட் ஏற்றுமதி
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்குமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஃபிட் இந்தியா இயக்கத்தின் சண்டேஸ் ஆன் சைக்கிள் திட்டம் 100 வாரங்களைத் தொடர்ந்து நிறைவு செய்து 37 லட்சம் மக்களை இணைத்துள்ளதாக அவர் கூறினார்.
இதோடு குஜராத்தின் கட்ச் ஒட்டகப் பால் சாக்லேட்டுகளின் வளர்ச்சியையும் இந்தியாவின் சாக்லேட் மற்றும் கோகோ ஏற்றுமதி கடந்த ஓராண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.