ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ரஷ்யா-உக்ரைன் மோதலில் மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளார்.
இந்த விவகாரம் உலக நாடுகளிடையே ராஜதந்திர ரீதியாக மிகவும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தாலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்தி மத்திய அரசு சரியாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சக்திகள் மோதலில் சிக்கும்போது மற்ற நாடுகள் எந்த பக்கம் செல்வது என்பதில் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன என்றார்.
மேலும், வெளியுறவுக் கொள்கைகள் முன்பை விட இன்று மிக முக்கியமானதாகிவிட்ட நேரத்தில், ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் தலைமைப் பதவியைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
manmohan speaks about indo-china relationship
சீன உறவு குறித்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
ஜி20 உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் முடிவு குறித்து பேசிய மன்மோகன் சிங், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவு செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.
அதே நேரம், இந்தியாவின் பிராந்திய மற்றும் இறையாண்மை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், சீனாவுடனான இருதரப்பு பதட்டத்தைத் தணிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் எடுப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.
சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், நாட்டிற்கு முன்னால் உள்ள சவால்கள் குறித்து பேசிய அவர், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை விட நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.