இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள்
மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக இந்திய இராணுவம் நேற்று(ஜூன் 26) மாலை ட்வீட் செய்திருக்கிறது. மேலும், 2 நிமிட வீடியோ ஒன்றையும் இந்திய இராணுவம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோவில் மணிப்பூர் பெண்கள் கலகக்காரர்களுக்கு உதவுவது போன்ற பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. இந்த பெண் ஆர்வலர்கள் மீது நான்கு கடுமையான குற்றச்சாட்டுகளை இராணுவம் முன்வைத்துள்ளது. மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள், "கலவரக்காரர்கள் தப்பி ஓட உதவி இருக்கிறார்கள், பகல் இரவு பாராமல் இராணுவ நடவடிக்கைகளில் தலையிடுகிறார்கள், தளவாடங்களின் இயக்கத்தில் குறுக்கிடுகிறார்கள், அசாம் ரைபிள்ஸ் முகாமிற்குள் நுழைவதை தாமதப்படுத்த முகாமின் நுழைவுவாயிலை தோண்டி இருக்கிறார்கள்" என்று இராணுவம் தெரிவித்திருக்கிறது.
'பாதுகாப்புப் படையினரின் கடமைகளை செய்யவிடாமல் தடுக்கிறார்கள்': இராணுவம்
"மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே வழிகளைத் தடுத்து, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர். இத்தகைய தேவையற்ற தலையீடுகள், உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்ற விரைந்து கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினரின் கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும்," என்று இந்திய இராணுவம் தெரிவித்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன், கிழக்கு இம்பாலில், மெய்த்தே பிரிவினைவாதக் குழுவை சேர்ந்த 12-ஆண்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பெண்கள் தலைமையிலான 1,500 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு படையினரின் வழியை மறித்து அவர்களை போகவிடாமல் தடுத்தது. அந்த 12 பேரும் விடுவிக்கப்பட்ட பிறகே அந்த கும்பல் கலைந்தது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இராணுவம் தற்போது பெண் ஆர்வலர்களால் மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து ட்வீட் செய்திருக்கிறது.