மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டம் துவங்கிய நாளிலிருந்தே மணிப்பூர் விவகாரம் குறித்து நீண்ட நேர விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் மோடி இதுகுறித்து உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமளி காரணமாக, கூட்டத்தொடர் துவங்கிய நாளிலிருந்து இதுவரை எவ்வித அலுவல் பணிகளும் மேற்கொள்ள முடியாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று(ஜூலை.,26) மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதற்கான நோட்டீஸினை காங்கிரஸ் எம்.பி.கெளரவ் கோகாய் மக்களவை செயலாளரிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்தி வைப்பு
இது குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதலும் அளித்துள்ளார். இதனிடையே கூட்டத்தொடரின் 6ம் நாளான இன்று(ஜூலை.,27) காலை கூட்டம் துவங்குவதற்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில், 26 எதிர்க்கட்சிகள் உள்ளடங்கிய INDIA கூட்டணி எம்.பி.க்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், கருப்பு உடையினை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இந்த மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் மோடி தகுந்த பதிலினை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கூட்டம் துவங்குவதற்கு முன்னரே எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதினை தொடர்ந்து, மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.