இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார். தனித்து போட்டியிடும் தனது முடிவிற்கு, தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். "நான் அவர்களுக்கு என்ன முன்மொழிவைக் கொடுத்தாலும், அவர்கள் அனைத்தையும் மறுத்துவிட்டனர். அப்போதிலிருந்து, நாங்கள் வங்காளத்தில் தனியாக நிற்க முடிவு செய்துள்ளோம்" என்று மம்தா கூறினார். முன்னதாக மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என்றும், அவரது உதவியின்றி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"பாரத் ஜோடோ நியாய யாத்திரை பற்றி என்னிடம் கூறவில்லை"
மேற்கு வங்காளத்தில் தங்கள் திட்டமிட்ட பாரத் யாத்திரை பற்றி காங்கிரஸ் ஒரு மரியாதைக்காக கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று மம்தா ஆதங்கத்துடன் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் பிஜேபிக்கு எதிராக ஒற்றுமையை வெளியிடுவதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு மம்தாவின் முடிவு மிக பெரிய சரிவை கொண்டுவந்துள்ளது. மம்தா மேலும், பிராந்திய கட்சிகள் அந்தந்த பகுதிகளில் பாஜகவை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதே நேரத்தில் 300 இடங்களில் பாஜகவை எதிர்த்துப் போராடுவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தட்டும் என்றும் பரிந்துரைத்தார். எனினும், பிராந்திய விவகாரங்களில் காங்கிரஸ் தலையிட்டால், பிராந்திய கட்சிகள் தங்கள் அணுகுமுறையை "மறுபரிசீலனை" செய்ய வேண்டி இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார். எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை மற்றும் ஒற்றுமை குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.