மம்தா பானர்ஜியின் அடைக்கல வாக்குறுதி, 'பயங்கரவாதிகளை ஈர்க்கக்கூடும்' என்று பங்களாதேஷ் கவலை
அண்டை நாடான பங்களாதேஷில் நடைபெற்று வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை நாடி வந்தால், அடைக்கலம் தரத்தயாராக இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்திற்கு பங்களாதேஷ் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது. இந்த 'அடைக்கல உதவியை', பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 21 அன்று திரிணாமுல் காங்கிரஸின் மெகா 'தியாகிகள்' தினப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து மக்கள் "எங்கள் கதவுகளைத் தட்டினால்" அவர்களின் அரசாங்கம் தங்குமிடம் வழங்கும் என்றார்.
மம்தா கூறியது என்ன?
"வங்கதேசம் வேறு நாடு என்பதால் என்னால் எதுவும் பேச முடியாது. இந்திய அரசு அதைப் பற்றி பேசும். ஆனால் ஆதரவற்ற மக்கள் (வங்காளதேசத்தில் இருந்து) வங்காளத்தின் கதவைத் தட்டினால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம். ஐக்கிய நாடுகள் சபையின் அண்டை நாடுகள் தீர்மானம் உள்ளது.. அகதிகளை மதிப்போம்" என்று மம்தா பானர்ஜி கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் மேலிடத்தின் எக்ஸ் பக்கமும் இதே வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தி பதிவிட்டிருந்தது.
மம்தாவின் கருத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த பங்களாதேஷ்
ஆதாரங்களின்படி, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பங்களாதேஷ் அரசாங்கம் கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது. இந்த வகையான கருத்து, குறிப்பாக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான உத்தரவாதம், இதுபோன்ற அறிவிப்பைப் பயன்படுத்திக் கொள்ள பலர், குறிப்பாக பயங்கரவாதிகள் மற்றும் தவறான நபர்களைத் தூண்டக்கூடும் என்று பங்களாதேஷ் கூறியது. மேலும், பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அவர்கள் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும், மேற்கு வங்காள முதலமைச்சரின் இத்தகைய கருத்துக்கள் தவறானவை என்றும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போன்றது என்றும் தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் குறித்து மம்தா பானர்ஜி கூறியது நாட்டில் நடைமுறையில் இல்லை என்று வங்கதேச அரசு மேலும் தெரிவித்துள்ளது.