மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இந்திய ஆன்லைன் ட்ராவல் நிறுவனமான EaseMyTrip, சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்கு செல்லும் அனைத்து விமானங்களின் முன்பதிவுகளையும் நிறுத்தியது. இந்நிலையில், மாலத்தீவுக்கான முன்பதிவுகளை மீண்டும் தொடங்குமாறு EaseMyTrip நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாலத்தீவுகளின் டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கமான MATATO, அமைச்சர்கள் கூறிய "வருந்தத்தக்க" கருத்துகளைப் புறக்கணிக்குமாறு EaseMyTripக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் "பொதுவாக மாலத்தீவியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை" என்றும் MATATO கூறியுள்ளது.
"இந்தியர்கள் எங்களது நேசத்துக்குரிய சகோதர சகோதரிகள்"
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, மாலத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. எனவே இந்திய சுற்றுலாப் பயணிகளின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய MATATO, EaseMyTrip தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டியிடம் வேண்டுகோள் விடுக்க ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வரையறுக்கும் நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமது தேசங்களை இணைக்கும் பந்தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் இந்திய சகாக்களை... நேசத்துக்குரிய சகோதர சகோதரிகளாக நாங்கள் கருதுகிறோம்." என்று MATATO தனது அறிக்கையில் கூறியுள்ளது.