மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு
மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை எண்ணூர் பகுதியை, பைபர் படகில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆய்வு செய்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட வட தமிழக கரையோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீண்ட நிலையில், மழை நின்று இரண்டு வாரங்களாகியும் எண்ணூர் பகுதியில் வெள்ள நீர் முழுவதுமாக வடியவில்லை. மேலும், 5ம் தேதி சிபிசியில் நிறுவனத்தில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகள், பக்கிங்காம் கால்வாயில் கலந்து, எண்ணூர் முதல் காசிமேடு துறைமுகத்திலும் வரை பரவியுள்ளது.இந்நிலையில், இந்த கழிவுகளை நானூறு ஊழியர்கள் படகுகள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"17ஆம் தேதி அல்ல, 17 நாட்களில் கூட சுத்தம் செய்ய முடியாது"
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், பைபர் படகில் சென்று எண்ணெய் சிந்திய பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மீனவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், "இந்த எண்ணெய்யை டிசம்பர் 17ஆம் தேதிக்கு முன் சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்று 17ஆம் தேதி. அடுத்த 17 நாட்களில் கூட சுத்தம் முடியாது. இங்கு எண்ணெயை சுத்தம் செய்ய டெக்னீஷியன் மற்றும் முறையான கருவிகள் இல்லை. இப்பணிக்கு மீனவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணமானவர்களை அரசு தண்டிக்க வேண்டும்" என தெரிவித்தார்.