மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி; அடுத்த முதல்வர் யார்?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நவம்பர் 25 ஆம் தேதி நடத்துகிறது. பதவியேற்பு விழா அடுத்த நாள், நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு) ஆகிய மகாயுதி கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை உறுதி செய்த பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டது. பாஜக 128 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 55 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?
மகாயுதி கூட்டணி அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், பாஜக அதிக அதிக இடங்களுடன் இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களை எட்ட முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியே அமைக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. எனினும், தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா அல்லது பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவிடம் இதுகுறித்து கேட்கையில், கூட்டணி ஆலோசித்து முடிவு செய்யும் எனக் கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். எப்படியிருப்பினும், பாஜக முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ளும் என்றும், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் வெற்றி நிலவரம்
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக மகா விகாஸ் அகாதி (எம்விஏ) 51 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் 20 இடங்களிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) 16 இடங்களிலும், என்சிபி (சரத் பவார் அணி) 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையே, மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகளும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. ஏஐஎம்ஐஎம், ஜன் சுராஜ்ய சக்தி, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவை தலா இரண்டு இடங்களிலும், சுதந்திர பாரத் பக்ஷா, இந்திய மதச்சார்பற்ற மிகப்பெரிய சட்டமன்றம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் விகாஸ் அகாதி மற்றும் ராஜர்ஷி ஷாஹு விகாஸ் அகாதி தலா ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. ஐந்து சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.