Loading...
மகாதேவ் ஆப் முறைகேடு வழக்கு: ஓமானில் இருந்து முக்கிய குற்றவாளி சௌரப் சந்திராகர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்
மகாதேவ் ஆன்லைன் புக் செயலியின் நிறுவனர் சிபிஐ சிறப்பு குழுவினரால் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளார்

மகாதேவ் ஆப் முறைகேடு வழக்கு: ஓமானில் இருந்து முக்கிய குற்றவாளி சௌரப் சந்திராகர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
10:52 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியும், 'மகாதேவ் ஆன்லைன் புக்' செயலியின் நிறுவனருமான சௌரப் சந்திராகரை ஓமான் சுல்தானகத்திலிருந்து சிபிஐ வெற்றிகரமாக இந்தியாவுக்குப் பிடித்து வந்துள்ளது. மத்திய உளவுத்துறை மற்றும் பிற மத்திய முகமைகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் சிபிஐ சிறப்பு குழுவினரால் பாதுகாப்புடன் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளார். சௌரப் சந்திராகர் ராய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஹவாலா

ரூ. 94,000 கோடி சூதாட்டப் பேரரசு & ஹவாலா வலையமைப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சௌரப் சந்திராகர் மற்றும் ரவி உப்பால் ஆகியோரால் துபாயை தலைமையிடமாகக் கொண்டு 2019-20 காலக்கட்டத்தில் இந்த மகாதேவ் ஆப் நெட்வொர்க் தொடங்கப்பட்டது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சுமார் 3,200 பேனல்கள் மூலம் இச்சூதாட்டம் நடத்தப்பட்டது.

கிரிக்கெட், கால்பந்து மற்றும் கார்டு கேம்கள் மூலம் ஈட்டப்பட்ட லாபத்தில் 70% முதல் 80% வரை ஹவாலா மற்றும் போலி வங்கிக் கணக்குகள் வாயிலாக துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

இச்சூதாட்டத்தின் மூலம் பெற்ற மொத்தப் பணம் ரூ. 88,000 கோடி முதல் ரூ. 94,000 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 4,000 - 5,000 கோடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.

அரசியல்

ரூ. 200 கோடி திருமண ஆடம்பரம் & அரசியல் தொடர்புகள்

இந்தியாவிலிருந்து 2022-இல் தப்பிச்சென்று வனுவாட்டு நாட்டின் குடியுரிமை பெற்ற சந்திராகர், 2023 பிப்ரவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் நடத்திய திருமணத்தில் மட்டும் ரூ. 200 கோடி ரொக்கப் பணத்தைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலக் காவல்துறையினருக்கும் அரசியல் புள்ளிகளுக்கும் ரூ. 500 கோடிக்கும் அதிகமான தொகை லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட தகவல்கள் வெளியாகின.

இதுவரை அமலாக்கத்துறை ரூ. 3,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.

சிபிஐ ஏற்கனவே தாக்கல் செய்துள்ள 2 குற்றப்பத்திரிகைகளிலும், அமலாக்கத்துறையின் வழக்குகளிலும் சௌரப் சந்திராகர் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓமானில் இருந்து இவர் பிடித்துவரப்பட்டது சர்வதேச அளவில் தப்பி வாழும் குற்றவாளிகளுக்கு விடப்பட்ட பலத்த எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT