Loading...
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: தருமபுரியில் முக்கிய குற்றவாளி நிஷாந்த் பிடிபட்டார்
தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிஷாந்த் தருமபுரியில் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: தருமபுரியில் முக்கிய குற்றவாளி நிஷாந்த் பிடிபட்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 16, 2026
12:12 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை பழங்காநத்தம் புறவழி சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிஷாந்தை, 5 நாள் தீவிரத் தேடுதல் வேட்டைக்கு பிறகு தனிப்படை போலீஸார் தருமபுரியில் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் தேசம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த நிஷாந்தை நள்ளிரவு 2 மணியளவில் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பிக்க பேருந்தின் ஜன்னல் வழியாகக் குதித்து ஓட முயன்ற அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அதியமான்கோட்டையிலிருந்து அவரை மதுரைக்கு அழைத்து வரும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

துப்பு

காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி அளித்த துப்பு

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்திற்கு, அவரது தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் காதலியும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி ஆகியோர் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

மீனாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாடக்குளத்தில் நிஷாந்திற்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 5.5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சோதனை

மீதமுள்ள நகைகளை மீட்கத் தீவிர சோதனை

முக்கியக் குற்றவாளி நிஷாந்த் பிடிபட்டுள்ள நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள சுமார் 9.5 கிலோ நகைகளை மீட்கும் நடவடிக்கையை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

மாடக்குளம் கண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர்.

நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான விளைநிலங்கள், மரப்பொந்துகள் மற்றும் கிணறுகளில் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நிஷாந்தின் வீட்டைச் சுற்றி மூன்றாவது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுச் சோதனை தொடர்கிறது.

ADVERTISEMENT