Loading...
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கூண்டோடு பிடிக்க உதவிய சாமானிய மக்களின் துணிச்சலான பங்களிப்பு
தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி நிஷாந்த் மற்றும் அவருடைய தோழி மீனாட்சி

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கூண்டோடு பிடிக்க உதவிய சாமானிய மக்களின் துணிச்சலான பங்களிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
02:22 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான பெருங்கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்வதற்கு சாமானிய மக்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் அவர்கள் வழங்கிய தகவல்களுமே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளன. காவல்துறையின் தீவிரத் தேடுதல் வேட்டைக்கு வலுசேர்க்கும் வகையில், இந்த வழக்கின் ஒவ்வொரு திருப்புமுனைக்கும் காரணமாக இருந்த சாதாரண மனிதர்களின் பங்களிப்பு வியப்புக்குரியது.

#1

ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

தலைமறைவாக இருந்த நிஷாந்த், முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்து தனது அடையாளத்தை முழுமையாக மறைத்தபடி தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

பேருந்தில் ஏறும்போது கூடுதல் பணம் கொடுத்து முன்பதிவு செய்ததுடன், அவரது அசைவுகள் மீது சந்தேகம் கொண்ட ஓட்டுநரும், நடத்துநரும், சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்த கொள்ளையனின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

அவர் நிஷாந்தாக இருக்கலாம் என்பதை உறுதிசெய்த அவர்கள், உடனே தங்களுக்கு தெரிந்த காவல்துறை நண்பருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் உஷாரான போலீசார், தருமபுரி அதியமான்கோட்டை சோதனைச் சாவடியில் அந்தப் பேருந்தை வழிமறித்து நிஷாந்தை திரைப்பட பாணியில் கைது செய்தனர்.

#2

நகைக்கடை ஊழியர்

கொள்ளை நடந்தபோது குற்றவாளி முகமூடி அணிந்திருந்ததால் சிசிடிவி காட்சிகள் மூலம் உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.

அப்போது, கொள்ளைச் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தொப்பி மற்றும் கையில் டாட்டூவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் கடையை நோட்டமிட்ட ஒரு இளைஞரை பற்றி கடை ஊழியர் ஒருவர் போலீசாரிடம் விவரித்தார்.

அந்தத் துப்பைக் கொண்டு பழைய சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தபோதே, அது நிஷாந்த் என்பது உறுதியானது.

ADVERTISEMENT

#3

ஆடு மேய்ப்பவர்

கொள்ளைக்குப் பிறகு மாடக்குளம் கண்மாய் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சிலர் ஆட்டோவில் வந்து துணிகள் மற்றும் பொருட்களை எரிப்பதை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.

அவர் அளித்த துல்லியமான தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் நடத்திய தீவிர விசாரணையில்தான், குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் அவர்களது தப்பிக்கும் வழித்தடம் தெரியவந்தது.

இதன் மூலமே நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி கைது செய்யப்பட்டதுடன், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.

ADVERTISEMENT

#4

திருப்பூர் வழிப்போக்கர்

போலீசாரிடம் தான் இருக்கும் இடம் சிக்காமல் இருக்கத் தனது சொந்தச் செல்போனை அணைத்து வைத்திருந்த நிஷாந்த், திருப்பூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவரிடம் அவசரத் தேவை எனக் கூறி அவரது செல்போனை வாங்கி தன் தோழி மீனாட்சிக்கு அழைத்துச் பேசியுள்ளார்.

அந்த செல்போன் அழைப்பு விவரங்களின் அடிப்படையில்தான் சைபர் கிரைம் போலீசார் மீனாட்சி மற்றும் சுரேஷ் பதுங்கியிருந்த இடத்தைக் கூண்டோடு நெருங்க முடிந்தது.

குற்றவாளிகளைத் தப்பிக்க விடாமல் தடுத்து, சட்டம் தன் கடமையைச் செய்யப் பக்கபலமாக நின்ற இந்தச் சாமானிய மனிதர்களின் துணிச்சலும் விழிப்புணர்வும் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT