Loading...
விதிகளை மீறி பணி நியமன ஒப்புதல்; பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
விதிகளை மீறி பணி நியமன ஒப்புதல் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

விதிகளை மீறி பணி நியமன ஒப்புதல்; பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
12:34 pm

செய்தி முன்னோட்டம்

அரசின் விதிகளை மீறி ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அரசு விதிகளை புறக்கணித்து பணி நியமன ஒப்புதல் வழங்கியதால் அரசுக்கு பெருமளவில் நிதி இழப்பு ஏற்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணையின் முடிவில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உரிய விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட ஆணை

63 மாணவிகள் கொண்ட பள்ளியில் 2018 அரசாணையை மீறி திருத்தப்பட்ட பணியாளர் நிர்ணய ஆணை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அரசு நிதியுதவி பெற்று செயல்படும் வள்ளியம்மையார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வெறும் 63 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட அரசாணைப்படி குறைந்தபட்சம் 250 மாணவர்கள் பயின்றால் மட்டுமே அலுவலகப் பணியாளர்களை நியமிக்க முடியும்.

ஆனால் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா. சங்கீதா சின்னராணி இந்த விதியை மீறியுள்ளார்.

கடந்த ஜூலை 24 அன்று 2025-26 கல்வி ஆண்டுக்கான பணியாளர் நிர்ணய ஆணையை அவர் தன்னிச்சையாகத் திருத்தி வெளியிட்டுள்ளார்.

பணியிடங்களுக்கு அங்கீகாரம்

பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற காவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அங்கீகாரம்

பணியாளர் நிர்ணய ஆணையைத் திருத்தியதைத் தொடர்ந்து அப்பள்ளியில் காலியாக இருந்த மூன்று பணியிடங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அங்கீகாரம் அளித்துள்ளார்.

அதன்படி 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற காவலர் மற்றும் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் பணியிடமும் அனுமதிக்கப்பட்ட பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 மற்றும் 2026-27 கல்வி ஆண்டுகளுக்கான இந்த உத்தரவு சட்டவிரோதமானது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

விசாரிக்க உத்தரவு

பணி நியமனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரிக்க உத்தரவு

இந்த மனுவை நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி விதிமீறல்கள் குறித்து விரிவாக வாதிட்டார்.

இதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு முடியும் வரை எவ்விதப் பணி நியமனங்களையும் மேற்கொள்ளவோ காலிப் பணியிடங்களை நிரப்பவோ இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT