மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் தற்கொலை: போலீஸார் சஸ்பெண்ட்; சிபிசிஐடி விசாரணை
செய்தி முன்னோட்டம்
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சரக்கு வாகன ஓட்டுநர் ஒருவர், காவல் நிலையக் கழிவறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற அந்த ஓட்டுநர், தனது வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அவரே புகார் அளித்திருந்த நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பணியில் இருந்த காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
சரக்கு வாகன தீ விபத்தும் இரவு நேர விசாரணையும்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநரான பாலகிருஷ்ணன், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அதிகாலை தேவாரத்திலிருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது வளந்தூர் கண்மாய் கரை அருகே அவரது சரக்கு வாகனத்தில் திடீரெனத் தீப்பிடித்து, வாகனத்தில் இருந்த சரக்குகள் அனைத்தும் எரிந்து சேதமாகியுள்ளன.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வளந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
புகார் அளித்து 10 நாட்கள் ஆன நிலையில், இந்த வழக்கு தொடர்பாகவும், சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காகவும் நேற்று (நவ. 13) இரவு 10.45 மணியளவில் பாலகிருஷ்ணனை போலீஸார் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
போலீஸார் சஸ்பெண்ட்
கழிவறையில் தூக்கிட்ட நிலையில் மீட்பு
காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறையில் வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், இன்று (நவ. 14) அதிகாலை கழிவறைக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீஸார் காலை 6 மணியளவில் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு அவர் தூக்கிட்ட நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல் நிலையத்திற்குள் புகார்தாரரே உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், பணியில் இருந்த காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் அதிரடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் காவல்துறை உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.