மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணிகளை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதியளித்தது. அதனடிப்படையில், பொறியியல் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் தலா 2 உதவிப்பேராசிரியர்கள், வேதியியல் துறையில் ஒரு உதவிப்பேராசிரியர் என 5 பேர் தேர்வுச்செய்யப்பட்டனர். இவர்களது கல்வித்தகுதியினை அங்கீகரிக்க கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பேராசியர்களுக்கான தேர்வு நடைமுறையில் 2018ம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றுக்கூறி அவர்களுக்கான கல்வி தகுதியினை அங்கீகரிக்க பதிவாளர் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த உத்தரவினை ரத்து செய்யவேண்டும் என்று கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
மானியக்குழு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நீதிபதி காட்டம்
இம்மனுவினை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எல்.விக்டோரியாகவுரி விசாரித்து வந்த நிலையில், இன்று(நவ.,21)இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவி பேராசிரியர்கள் பணிநியமன குழுவில் துணைவேந்தர் பிரதிநிதிகள் இருவர் இருக்கவேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக்குழு விதி.,2018ல் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையினை அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அரசாணையும் வெளியிட்டது. ஆனால் மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இந்த விதி பின்பற்றப்படவில்லை. அதேசமயம், இந்த 5 பேராசிரியர்கள் நியமனம் குறித்து பல்கலைக்கழகம் எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் அனுப்பிய விண்ணப்பத்தை திரும்ப அனுப்பி பல்கலைக்கழக பதிவாளர் கடந்த 2020 டிசம்பர் 31ம்.,தேதி பிறப்பித்த உத்தரவில் தலையிடமுடியாது என்றுக்கூறி, இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.