யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற டிடிஎஃப் வாசன், வீலிங் செய்ய முற்படும்போது தனக்குத்தானே விபத்தை ஏற்படுத்தி காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்தியதற்காக பாலுரெட்டிசத்திரம் காவல்துறையினர் மோட்டார் வாகன சட்டப்படி இரு பிரிவுகளிலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வாசன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டது முதல் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில், வாசன் தரப்பினர் தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு செய்து வந்தனர்.
மூன்று வாரத்திற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்
காஞ்சிபுரம் நீதிமன்றம் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வாசன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது, நீதிபதி சிவி கார்த்திகேயன் மிகவும் காட்டமான கருத்தையும் பதிவு செய்து ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதனை அடுத்து டிடிஎஃப் வாசன் மீண்டும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கையில் அடிபட்டு இருப்பதால் மருத்துவம் பார்ப்பதற்காக ஜாமீன் கோரி இருந்தார். இந்நிலையில் 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வாசனுக்கு, மூன்று வாரத்திற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.