முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
1991-1996 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது.
அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக செல்வகணபதி இருந்தார்.
அப்போது தமிழ்நாடு முழுவதுமுள்ள சுடுகாடு அனைத்திற்கும் கூரை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த திட்டத்தில் அரசுக்கு சுமார் ரூ.23 லட்சம் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ கடந்த 1997ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் முடிவில் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகளான சத்யமூர்த்தி, ஆச்சார்யலு உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை
சிறை தண்டனையினை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல்
இதனிடையே அவர்கள் மீதான கூட்டு சதி வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் கூட்டுச்சதி வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்தது.
அதே போல் தங்களுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, இது குறித்த வழக்கு இன்று(நவ.,28) சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி செல்வகணபதி உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்ததோடு, அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகவும் கூறி உத்தரவிட்டுள்ளார்.