அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட்
சென்ற மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம், அவர் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயத்தில், செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணையை அப்போதைக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இதனிடையே, அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றவும் ஒப்புதல் அளித்தது நீதிமன்றம்.
மாறுபட்ட தீர்ப்பை வாசித்த அமர்வு நீதிபதிகள்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில், நீதிமன்ற காவலில் உள்ளார். தற்போது, செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், இருவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக கூறி, மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அமர்வு நீதிபதி, நிஷா பானு, செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் என்றும், அதனால் விடுவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் என்றும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதனால் அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.