மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயிலின் என்ஜினில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) தீ விபத்து ஏற்பட்டது. ரயில் குவாலியரில் இருந்து புறப்பட்டு சிதௌலி நிலையத்தை நெருங்கிய சில நிமிடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை அடுத்து, ரயில் சிதோலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், ஜான்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி இது குறித்து கூறுகையில், என்ஜினில் இருந்து புகை வெளியேறிய போதிலும், இது பயப்படும் அளவிற்கு இல்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.
இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் கிளம்பிய ரயில்
ரயில் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, மாற்று ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு கிளம்பியது. சம்பவ இடத்தில் இருந்த பயணிகள் சிலே ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், இரண்டு மணி நேரத்திற்கும் ரயில் நிறுத்தப்பட்ட பிறகு, என்ஜின் மாற்றப்பட்டு கிளம்புவதாகக் கூறியுள்ளனர். முன்னதாக, பெங்களூர் கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் உத்யன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதேபோல் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளில் இருந்து புகை வெளியேறியதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய 2 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்ததால், எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.