வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று, தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.