திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு
இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்(மநீம) கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய திமுக, அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதியை ஒதுக்கியது. இரு கட்சிகளுக்கும் இடையேயான உடன்படிக்கையின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்காக மநீம செயல்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மநீம கட்சி நிறுவனர் கமல்ஹாசனுக்கும் இடையே இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2021 மாநில சட்டசபை தேர்தல்களில் மநீம தனித்து போட்டியிட்டது. அந்த கட்சி உருவானதில் இருந்து அது கூட்டணி அரசியல் செய்வது இதுவே முதமுறையாகும்.
கூட்டணி காட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்
சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியில் பணியாற்ற மநீம முடிவு செய்துள்ளது என்றும் கூறினார். இதுவரை, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்களை ஒதுக்கியுள்ளது. மதிமுகவுக்கு ஒரு இடமும், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகள் விசிகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 10 இடங்களை காங்கிரஸுக்கு வழங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.