சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள், உணவகங்கள், அதனை சார்ந்த பார்கள் ஆகியவற்றிற்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு, 'எஃப்.எல்.12' என்னும் புதிய உரிமத்தினை அறிமுகம் செய்தது. இந்த உரிமம் மதுபானங்கள் இருப்பு, சர்வதேச மற்றும் தேசியளவில் நடக்கும் மாநாடுகள், நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்டவைகளில் பங்கேற்போருக்கு பரிமாறுவதற்காக வழங்கப்படுவதாகும்.
புதிய அரசாணை பிறப்பிப்பு
அதன்படி திருமண அரங்கு, கருத்தரங்கம், விருந்து அரங்குகள் உள்ளிட்டவைகளிலும் மதுபானம் இருப்பு வைத்து பரிமாற, இந்த உரிமம் அனுமதிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் திருமண அரங்குகள் போன்ற பொது இடங்களில் அனுமதி வழங்கும் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகளில் மட்டும் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசின் அரசாணைக்கு எழுந்த எதிர்ப்பு
இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு என்பவர் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், புதிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த முறை நடந்த விசாரணையில், சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதிக்கப்படும் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதா? என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால தடை நீட்டிப்பு
இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்.,9)மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுபான சட்ட திருத்த விதிகள், இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனு, இன்று தான் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு கூறிய நிலையில், இவ்வழக்கின் அடுத்த விசாரணையினை அக்.,30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் சட்ட திருத்தங்கள் மீதான இடைக்கால தடையையும் நீட்டித்துள்ளனர்.