LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி
எதிர் பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருப்பார்கள் என்று சட்டம் கருதிவிட முடியாது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். "தத்தெடுப்பு விதிமுறைகள் குயர்(LGBTQIA+) தம்பதிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதால் அது அரசியலமைப்பை மீறுவதாகும்" என்றும் அவர் கூறியுள்ளார். குயர் தம்பதிகளை தத்தெடுப்பதில் இருந்து விலக்கும் "மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின்(CARA) சுற்றறிக்கை அரசியலமைப்பின் 15 வது சட்டப்பிரிவை மீறுகிறது" என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். "CARA ஒழுங்குமுறை 5(3), குயர் தம்பதிகளுக்கு எதிராக மறைமுகமாக பாகுபாடு காட்டுகிறது. ஒரு குயர் நபர் தனிப்பட்ட முறையில் மட்டுமே தத்தெடுக்க முடியும் என்பது, குயர் சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை வலுப்படுத்துவதாகும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
5 நீதிபதிகளின் தீர்ப்புக்கு இணங்கவே இறுதி தீர்ப்புகள் வழங்கப்படும்
"எதிர் பாலின தம்பதிகள் மட்டுமே ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கையை வழங்க முடியும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை," என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்குவர். இந்த விவகாரத்தில் நான்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், 5 நீதிபதிகளின் தீர்ப்புக்கு இணங்கவே இறுதி தீர்ப்புகள் வழங்கப்படும். எனினும், நீதிபதி எஸ் ரவீந்திர பட்டின் தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். நீதிபதி எஸ் ரவீந்திர பட், தற்போது தான் தனது தீர்ப்பை வாசித்து கொண்டிருக்கிறார்.