
கோயில் பிரசாதங்கள், அன்னதானங்களின் தரங்களை உறுதி செய்யும் செயலி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்களின் தரத்தினை உறுதி செய்து அதனை பதிவேற்றம் செய்யும் புதுசெயலி ஒன்றினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்துள்ளார்.
இதற்கான நிகழ்ச்சி நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை தலைமையகத்தில் நடந்தது.
அதில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகம் முழுவதும் 15 கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டமானது செயல்பட்டு வரும் நிலையில் மேலும் 5 கோயில்களை இந்தாண்டு சேர்க்கப்படவுள்ளது.
அதேபோல் நாள் முழுவதுமான அன்னதானத்திட்டம் 8 கோயில்களிலும், ஒருவேளை அன்னதான திட்டம் 764 கோயில்களிலும் செயல்பாட்டில் உள்ளது.
இதன் மூலம் தினமும் 82,000 மக்கள் பயன்பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, பழநி-தைப்பூசம் முன்னிட்டு 2 லட்சம் பக்தர்களுக்கு 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
செயலி
'குறைகளை பதவிடுக' பிரிவில் புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம் - அமைச்சர்
மேலும் அவர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் திருவிழா காலங்களில் தினமும் 5,000 மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுபோன்று கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தினை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியினை 'கியூஸ்ட் சர்டிவிகேசன் பிரைவேட்' என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் ஒரு ஆண்டில் 3 முறை கோயில்களில் இதுகுறித்த ஆய்வினை மேற்கொள்ளும்.
அதன்படி, மாதந்தோறும் 125 கோயில்களில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரசாதங்கள் அன்னதானம் குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் புகார் அளிக்கவேண்டுமெனில் இந்த செயலி மூலம் துறை இணையத்தளத்தில் 'குறைகளை பதிவிடுக' என்ற பிரிவு மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.