மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் இன்று(ஏப் 28) வருகை தர இருந்த நிலையில், நேற்று அங்கு வன்முறை வெடித்தது. இதனால், அங்கு கூட்டங்கள் சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று, பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற பகுதிகளை கணக்கெடுப்பதாகக் கூறிய ஒரு கும்பல் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் இடத்தை நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தது. இதனையடுத்து, பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதாலும் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாலும், பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. சுராசந்த்பூர் மாவட்ட கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ்.தியென்லட்ஜோய் காங்டே தனது அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டத்தில் பந்த் அறிவிப்பு
மேலும், இதனால், பூர்வீக பழங்குடியின தலைவர்கள் மன்றம் பணிநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை அணிதிரட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் இன்று அந்த மாவட்டத்தில் ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு வசதியை திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு குழு நாற்காலிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் சேதப்படுத்துவது தெரிந்தது. மேலும், அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கும் தீ வைத்தனர். பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பழங்குடியின தலைவர்கள் மன்றம் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டத்தில் பந்த் நடத்துகிறது.