இந்தியா - சீனா எல்லையில் இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாட்டம்; படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது. இன்று, தீபாவளியை முன்னிட்டு, இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினர் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 2017-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தினர், சீன ராணுவத்தால் டோக்லாம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியின் போது, இரு தரப்பில் மோதல்கள் ஆரம்பமாகின. அதன் தொடர்ச்சியாக 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலினால் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இது இந்திய-சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
பல கட்ட பேச்சுவார்த்தையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி
இந்த பிரச்சினையை தீர்க்க, கடந்த 4 ஆண்டுகளில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இறுதியாக கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியில் இரு தரப்பு படையினர் வாபஸ் பெறுவதற்கான முடிவை இந்தியா கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி அறிவித்தது. இதனை சீனாவும் ஆமோதித்து. அதன் பிறகு, ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்தித்து பேசினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்குப்பின், இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் வாபஸ் பெறும் பணியை நேற்று முடித்தனர்.