
மகாராஷ்டிராவில் அவதூறு வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி முன்ஜாமீன் பெற்றார் குணால் கம்ரா?
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிரான கருத்துகள் தொடர்பாக மகாராஷ்டிராவில் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
முன்னதாக, யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என்று பொருள்படும் வகையில் குணால் கம்ரா வெளியிட்ட பகடி பாடல், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்களை கோபப்படுத்தியது.
இதையடுத்து மும்பையில் உள்ள கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹேபிடட் ஸ்டுடியோவை சிவசேனா தொண்டர்கள் சேதப்படுத்தியதால், அது மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், சிவசேனா கட்சியினர் வழங்கிய புகார்களின் அடிப்படையில் பல்வேறு எஃப்ஐஆர்கள் மகாராஷ்டிராவில் போடப்பட்டுள்ளன.
சென்னை
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மும்பை காவல்துறை அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கைதாவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என தன்னைக் கூறிக்கொண்ட குணால் கம்ரா, இதனால், தனது வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருப்பதாக தெரிவித்தார்.
இது அவசர வழக்காக நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், குணால் கம்ராவை கைது செய்து கொண்டு செல்வதற்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே தனது கட்சியினரின் வன்முறையை கண்டித்ததோடு, கம்ராவின் செயலும் சரியல்ல என்று அவரையும் விமர்சித்துள்ளார்.