இன்று மாலை 6.30 மணிக்கு கூடுகிறது முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடருக்கு இடையே இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி மற்றும் பிற அமைச்சர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் என்ன விவாதிப்பட இருக்கிறது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
இன்று காலை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம்
இன்று காலை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், ஐந்து நாள் அமர்வின் போது கட்சிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தொடரவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் வன்முறை மற்றும் எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் போன்ற பிரச்சினைகளில் அரசாங்கத்தை முட்டுக்கட்டை போடவும் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர். அதானி சர்ச்சை, விவசாயிகள் நெருக்கடி, நாட்டின் பொருளாதார நிலை, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.