'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். "இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் சுமார் 7,000 பேர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடரும் பகைமை இந்த குடிமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்," என்று கேரள முதல்வர் வெளியுறவு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். "இஸ்ரேலில் உள்ள நம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வழிகளிலும் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.
இதுவரை 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கடந்த சனிக்கிழமை, இஸ்ரேல் மீது திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் ஆரம்பித்து 4 நாட்கள் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த மோதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பிலிருந்தும் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பாலஸ்தீனியர்கள் வசித்து வரும் காசா பகுதியின் எல்லையில் முழு கட்டுப்பாட்டையும் மீட்டெடுத்துவிட்டோம் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது. மேலும், இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்களை கண்டுபிடித்ததாகவும் இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.