வயநாடு மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதாக கர்நாடக அரசு அறிவிப்பு
கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவில், "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிவு பேரழிவை எதிர்கொள்ள, கர்நாடகா கேரளாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது. நான் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எங்களது ஆதரவை உறுதியளித்துள்ளேன். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகளை கட்டித் தரும் என்று அறிவித்துள்ளேன். நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுப்போம்." என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ள நிலையில், ஐந்தாவது நாளாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.