கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு கிடுகிடு உயர்வு; தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெங்கு மற்றும் பிற பரவும் நோய்களை திறம்பட கட்டுப்படுத்துவதற்காக, கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, 2020 ஆம் ஆண்டுக்கான கர்நாடக தொற்றுநோய்கள் விதிமுறைகளை அரசாங்கம் திருத்தியுள்ளது. இதன் மூலம், டெங்கு நோய் பரவல் மற்றும் பாதிப்பைக் கட்டுப்படுத்த அவசர மற்றும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் தேவைப்படும் நிலையை எட்டியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு நிலம், கட்டிடம், தண்ணீர் தொட்டி, பூங்கா, விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த இடத்தின் உரிமையாளர், வசிப்பவர், கட்டிடம் கட்டுபவர் அல்லது நபர் கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும்.
விதி மீறினால் அபராதம்
இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வீடுகளுக்கு, நகர்ப்புறங்களில், 400 ரூபாயும், கிராமப்புறங்களில், 200 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. வணிக இடங்களுக்கு நகர்ப்புறங்களில் ரூ 1,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ 500 அபராதம் விதிக்கப்படும். கட்டுமான தளங்கள் மற்றும் காலி மனைகளுக்கு நகர்ப்புறங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் குற்றம் தொடர்ந்தாள், மீறும் ஒவ்வொரு வாரத்திற்கும் மொத்தத் தொகையில் 50% கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். இதற்கிடையே, மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் 27,189 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பெங்களூர் நகரில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.