தமிழகத்தில் கர்நாடகாவின் 'நந்தினி' - ஆவின் நிறுவனத்திற்கு வரும் ஆபத்து
தமிழ்நாடு மாநிலத்தில் 'ஆவின்' பால் நிறுவனம் இயங்கி வருவது போல், கர்நாடகா மாநிலத்தில் 'நந்தினி' என்னும் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆவின் போலவே பச்சை, நீலம், ஆரஞ்ச் வண்ணங்களில் நந்தினி நிறுவனமும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் நந்தினி பால் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் 'நந்தினி' நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறது. எனவே, மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் ஏதேனும் ஓரிடத்தில் பால் பாக் செய்யும் ஆலைகள் இருந்தால் வரும் அக்.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தூக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு
இதில் கவனிக்கதக்கது என்னவென்றால், தமிழகத்தில் விற்பனை துவங்கும் முன்னரே 'நந்தினி' பால் பாக்கெட்டுகளை தமிழில் அச்சிடப்பட்டு கர்நாடக பால்வளத்துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, பால் முகவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, குஜராத் மாநில பால் நிறுவனமான 'அமுல்' தமிழகத்தில் கடைகளை அதிகப்படுத்தி பால் கொள்முதல் செய்து வருவதால் ஆவினுக்கு பால் கொடுப்பது குறைத்துள்ளது. இதனிடையே, கர்நாடகாவின் 'நந்தினி' பால் நிறுவனமும் தமிழகத்தில் தங்கள் வியாபாரத்தினை துவக்கினால் ஆவின் நிறுவனத்தை இழுத்துமூடும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தூக்கத்தில் உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். போர்கால அடிப்படையில் ஆவின் தனது பால் கொள்முதலை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.