பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
கர்நாடக அரசு ஊழியராக பணிபுரியும் 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் நேற்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த பிரதிமாவின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அவரை கத்தியால் குத்தி கொன்றனர். சம்பவம் நடக்கும் போது, பிரதிமாவின் கணவரும் அவர்களது மகனும் தங்களது சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்கு சென்றிருந்ததால் தாக்குதலின் போது பிரதிமா வீட்டில் தனியாக இருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில், பிரதிமாவை அவரது வாகன ஓட்டுநர் வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு, பிரதிமா யாருடைய கைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை.
யார் இந்த கொலையை செய்தது?
இதனால், கவலையடைந்த பிரதிமாவின் சகோதரர், அடுத்த நாள்(இன்று) காலை, பிரதிமா ஏன் அழைப்புகளை ஏற்கவில்லை என்பதை அறிய அவரது வீட்டிற்கு நேரில் சென்றிருக்கிறார். அப்போது தான், பிரதிமா கத்தி குத்தால் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். "தடவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் சம்பவ இடத்திலேயே பணியில் ஈடுபட்டுள்ளன. என்ன நடந்தது என்பது சரியாகத் தெரிந்தவுடன் தான், கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்," என்று பெங்களூரு நகர தெற்குப் பிரிவு டி.சி.பி., ராகுல் குமார் கூறியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரியாக இந்த கொலை நடந்திருப்பதால், பிரதிமாவுக்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.